சஞ்செய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி
சஞ்செய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
மும்பை,
மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே சிறையில் 1½ ஆண்டை கழித்த நிலையில், எஞ்சிய 3½ ஆண்டுகள் சிறை தண்டனைக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் மீண்டும் சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவர் பல முறை பரோல் விடுப்பில் அனுமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று மராட்டிய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தது. விடுதலையும் செய்யப்பட்டார். 8 மாதங்கள் அவரது தண்டனை காலம் இருந்தபோதும், அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனேவை சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் எந்த அடிப்படியில் சஞ்சய் தத்திற்கு விடுதலை வழங்கப்பட்டது. சஞ்சய் தத்தின் நல்ல நடத்தையை அதிகாரிகள் எப்படி மதிப்பிட்டனர். சஞ்சய் தத்திற்கு எதன் அடிப்படையில் அதிக நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது என பல்வேறு கேள்விகள் மனுவில் கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை நியாயப்படுத்துமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.
சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதில் பின்பற்றப்பட்ட நடைமுறை தொடர்பாக பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய மராட்டிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. சிறைத்துறை டிஐஜியிடம் ஆலோசிக்கப்பட்டதா அல்லது சிறை கண்காணிப்பாளர் நேரடியாக கவர்னருக்கு பரிந்துரையை வழங்கினாரா? எப்படி அதிகாரிகள் சஞ்சய் தத்தின் நன்னடத்தையை மதிப்பிட்டார்கள்? பாதி காலம் பரோலில் சென்ற சஞ்சய் தத்தின் நன்னடத்தையை அதிகாரிகள் மதிப்பிட்டது எப்போது? என மராட்டிய மாநில அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி இருந்தது.
இந்த நிலையில், இன்று மராட்டிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் பிரஜக்தா ஷிண்டே, இந்த வழக்கில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஷுதோஷ் கும்பகோனி ஆஜராக இருப்பதால் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.