இறக்குமதி செல்போன் உதிரி பாகங்களுக்கு 10 சதவீத சுங்க வரி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் சில குறிப்பிட்ட உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், ‘‘செல்போன்களுக்கு தேவைப்படும் சார்ஜர், பேட்டரி, வயர்ஹெட் செட், மைக்ரோபோன், ரிசீவர், கீ பேட், யு.எஸ்.பி. கேபிள் ஆகிய குறிப்பிட்ட உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது அவற்றுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே செல்போன்களுக்கு தேவையான இந்த உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படும் நோக்குடன் இந்த வரி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.