‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

Update: 2017-06-30 23:45 GMT

புதுடெல்லி,

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த முருகவேல் என்பவர் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடந்த 2015–16–ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியில் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் தாங்கள் பிளஸ்–2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 2017–18–ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு யாரும் எதிர்பாராத விதமாக நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சென்ற ஆண்டு மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது பிளஸ்–2 வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதுபோன்ற விதிவிலக்கு அளிக்காதது பாரபட்சமானதாகும்.

எனவே, 2016–17–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 வகுப்பு தேறிய மாணவர்களுக்கும் முன்பு அளித்தது போல் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏம்.எம்.சப்ரே, சஞ்சய் கி‌ஷண் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் வக்கீல் சபரீஷ் நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்