குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த 2½ வயது குழந்தை சாவு

குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில், தவறி விழுந்த 2½ வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. இதுதொடர்பாக என்ஜினீயர் மற்றும் காண்டிராக்டர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-18 22:20 GMT

பெங்களூரு:

உத்தரபிரதேச தம்பதி

பெங்களூரு மாகடி ரோட்டில் கொல்லர்ஹட்டி பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரு கூலி வேலை செய்து வரும் அவர்களுக்கு 2½ வயதில் கார்த்திக் என்ற மகன் இருந்தான். இவர்கள் வசித்து வரும் வீட்டின் அருகே குடிநீர், கழிவுநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வந்தது. இதற்காக அந்த பகுதியில் குழாய் பதிப்பதற்காக பெரிய குழி ஒன்று தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழியில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.

இந்த நிலையில் அந்த சிறுவன், வீட்டின் அருகே உள்ள பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த குழி அருகே குழந்தை சென்று விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி நீர் நிரம்பி இருந்த குழிக்குள் விழுந்தது. ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கிய குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

குழந்தை பரிதாப சாவு

விளையாட சென்ற குழந்தை வீடு திரும்பாததால் பயந்துபோன தம்பதி அந்த பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. விளையாட சென்ற இடத்தில் இருந்த குழியை சென்று பார்த்தபோது, குழிக்குள் குழந்தை உடல் மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி, உடனடியாக குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர்.

இதைக்கேட்டு பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் பேடரஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், குழாய் பதிப்பதற்காக, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் தோண்டப்பட்ட குழியில் குழந்தை தவறிவிழுந்து உயிரிழந்தது தெரிந்தது.

போலீசில் புகார்

மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் குழந்தை உயிரிழந்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அலட்சியமாக செயல்பட்ட குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் காண்டிராக்டர் மீது குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட சென்ற குழந்தை குழாய் பதிக்க தோண்டிய குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்