2 ஆண்டு சிறைத்தண்டனை எதிரொலி: ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து
2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடெல்லி,
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
ஒருவர் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.
2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இந்த தண்டனையால் அவரதுஎம்.பி. பதவி பறிக்கப்படுகிற ஆபத்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பான சட்ட நிபுணர்கள் கருத்து வருமாறு:-
ராகேஷ் திவிவேதி (அரசியல் சட்ட நிபுணர்):-
அவருடைய தண்டனையை மேல்முறையீட்டு கோர்ட்டு நிறுத்தி வைத்து, தீர்ப்புக்கு தடை விதித்து, ஜாமீன் வழங்குகிறபோது தகுதி நீக்கம் செய்யப்படாது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே 2013 மற்றும் 2018 வழங்கிய லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரகாரி வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள், தீர்ப்புக்கு தடை விதித்து, தண்டனையையும் நிறுத்தி வைத்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் பதவி பறிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
பி.டி.டி. ஆச்சாரி (மக்களவை முன்னாள் செயலாளர், அரசியல் சட்ட நிபுணர்):-
தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம். மேல் நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படுகிறது.
தகுதி நீக்கத்தைப் பொறுத்தமட்டில் தண்டனை காலம் மற்றும் தண்டனை காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகள் அமலில் இருக்கும்.
பெயர் குறிப்பிட விரும்பாத தேர்தல் கமிஷன் முன்னாள் அதிகாரி:-
லில்லி தாமஸ் வழக்கின் தீர்ப்பு, 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டனை என்றால், பதவி தானாகவே போய்விடும் என்கிறது. பின்னர் லோக் பிரகாரி வழக்கின் தீர்ப்பு, மேல்முறையீட்டில் விசாரணை கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டால், தகுதி நீக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டு விடும் என்கிறது. எனவே ராகுல் காந்தி, மேல்முறையீடு செய்து, அங்கு அவர்மீதான தீர்ப்புக்கு தடை பெற வேண்டும். தண்டனையை நிறுத்தி வைக்கச்செய்ய வேண்டும்.
இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே ராகுல் காந்தி, மேல்முறையீடு செய்து அங்கு தீர்ப்புக்கு தடையும், தண்டனை நிறுத்தமும் பெற்று விட்டால், பதவி பறிப்பு ஆபத்தில் இருந்து இப்போது தப்பி விடலாம்.