ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விஷம் குடித்தனர்
சீனிவாசப்பூர் தாலுகாவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனிவாசப்பூர்
ஆக்கிரமிப்பு நிலங்கள்
கோலார் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 600 ஏக்கர் நிலத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகாவில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்க சென்றனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற பொக்லைன் எந்திர வாகனங்களை கற்களால் தாக்கினர்.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று வனத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி, மிளகாய் உள்ளிட்ட செடிகளை பொக்லன் எந்திரங்களை கொண்டு வனத்துறை அதிகாரிகள் அழித்தனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஷம் குடித்தனர்
மேலும் ஆவேசம் அடைந்த சீனிவாசப்பூரை சேர்ந்த கோபால்ரெட்டியின் மனைவி சியாமளா(வயது 45), வெங்கடரெட்டியின் மனைவி லட்சுமிதேவம்மா(50) ஆகிய இருவரும் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலத்தை மீட்க எதிர்ப்பு தெரிவித்தும் பூச்சி கொல்லி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சீனிவாசப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரும் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். 2 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து சீனிவாசப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.