நாகாலாந்து சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை என 2 கிராம மக்கள் உறுதிமொழி
சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்கப்போவது இல்லை என்று 2 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
கோஹிமா,
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நாகாலாந்தில் உள்ள நிஹோகு மற்றும் திசாமா ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்கப்போவது இல்லை என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். இது தொடர்பான தீர்மானத்தையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதே போல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என மாநில தேர்தல் ஆணையர் சாஷங்க் சேகர் தெரிவித்துள்ளார்.