லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

லாரியில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2022-10-31 19:00 GMT

சிக்கமகளூரு;

ரகசிய தகவல்

சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா பிஜிகெரே கிராமத்தில் இருந்து பெலதரஹட்டி கிராமம் வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவதாக உணவு மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் உணவு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மொலகால்மூரு போலீசாருடன் சேர்ந்து பெலதரஹட்டி கிராமன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்தும் படி கையசைத்தனர்.

ரேஷன் அரசி மூட்டைகள்

அப்போது போலீசாா் நிற்பதை பார்த்த லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு கீேழ குதித்து தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த லாரியில் சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிஜிகெரே கிராமத்தை சேர்ந்த சிவலிங்கப்பா என்பதும், பிஜிகெரே கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை சட்டவிரோதமாக பெற்று கடத்திச் செல்வதையும் ஒப்புக் கொண்டார். இதுதொடா்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு

மேலும் அவரிடம் இருந்து லாரி, 50 ரேஷன் அரசி மூட்டைகளையும் உணவு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அரிசி மட்டும் மொத்தமாக 2½ டன் அளவில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து லாரி டிரைவர் சிவலிங்கப்பா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்