தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 மாணவர்கள் சிக்கினர்
பெங்களூருவில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 மாணவர்கள் சிக்கியுள்ளனர். விளையாட்டுக்காக இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்தாக 2 மாணவர்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ராஜாஜிநகர்:
2 மாணவர்கள் சிக்கினார்கள்
பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 5-ந் தேதி இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் காலையில் தான் இ-மெயிலை பார்த்து பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். பள்ளியில் எந்த வெடிகுண்டும் சிக்காததால, அது வெறும் புரளி என்று தெரிந்தது.
இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 2 மாணவர்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்கள் மற்றொரு பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 5-ந் தேதி இரவு 2 பேரும் இணையதளத்தை பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.
விளையாட்டுக்கு அனுப்பியதாக...
அப்போது, ராஜாஜிநகரில் உள்ள தனியார் பள்ளியில் வெப்சைட், இ-மெயில் முகவரி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக கூறி விளையாட்டுக்காக இ-மெயில் அனுப்பி வைத்ததாக 2 மாணவர்களும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த 2 மாணவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான தனியார் பள்ளிக்கும் கடந்த மாதம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவரே இ-மெயில் அனுப்பி வைத்திருந்தார். தற்போது 2-வது சம்பவமாக மாணவர்களே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.