தொழில்அதிபர் மகனை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சம் பறிப்பு: தனியார் தொண்டு நிறுவன தலைவி உள்பட 2 பேர் கைது

பெங்களூருவில் தொழில்அதிபர் மகனை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லடசம் பறித்த தனியார் தொண்டு நிறுவன தலைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-08-24 20:58 GMT

பெங்களூரு:

ரூ.4 கோடி கேட்டு மிரட்டல்

பெங்களூருவை சேர்ந்த தொழில்அதிபரின் மகன் சூரஜ். இவர், கடந்த 11-ந் தேதி புஷ்பா என்பவரை சந்தித்து பேசிவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றிருந்தார். பின்னர் பேடராயனபுரா பகுதியில் வைத்து புஷ்பாவை சந்தித்து சூரஜ் பேசினார். அப்போது அரசின் ஒப்பந்த பணிகளை எடுத்து தருவதாக சூரஜிடம் புஷ்பா கூறியுள்ளார். தனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தெரியும் என்றும், அவரிடம் வேலை பார்க்கும் உதவியாளர் என்று கூறி ஒருவரை சூரஜிடம் அறிமுகம் செய்தும் வைத்திருந்தார்.

இதற்காக தனக்கு ரூ.4 கோடி கொடுக்கும்படி புஷ்பா கேட்டதாக தெரிகிறது. ஆனால் சூரஜ் மறுத்து விட்டாா். இதனால் சூரஜை, புஷ்பா, அவரது கூட்டாளிகள் தாக்கி செல்போனை பறித்து கொண்டனர். மேலும் அவரது வாயில் துணியை வைத்து அமுக்கியும், கை, கால்களையும் கட்டி உள்ளனர். ரூ.4 கோடி கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று சூரஜை மிரட்டி உள்ளனர். அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிவிட்டார்.

துப்பாக்கி முனையில் மிரட்டல்

அதன்பிறகு, துப்பாக்கி முன்னிலையில் பணம் கொடுத்தால் தான் உயிருடன் விடுவோம் இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்றும் சூரஜை மிரட்டி உள்ளனர். இதையடுத்து, தனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக ரூ.25 லட்சத்தை திரட்டி சூரஜ் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, சூரஜை விடுவித்த புஷ்பா, அவரது கூட்டாளிகள் நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் சுட்டுக் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்திருந்தனர்.

இதுபற்றி முதலில் போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்காமல் சூரஜ் இருந்துள்ளார். பின்னர் கடந்த 18-ந் தேதி புஷ்பா உள்ளிட்டோர் மீது பேடராயனபுரா போலீஸ் நிலையத்தில் சூரஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை தேடிவந்தனர். மேலும் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

தொண்டு நிறுவன தலைவி

இந்த நிலையில், சூரஜை கடத்தி துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்தாக புஷ்பா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான புஷ்பா (வயது 30), மைசூரு ரோடு, ஜனதா காலனியை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு நபர் மைசூரு ரோடுவை சேர்ந்த ராகேஸ் (27) என்று தெரிந்தது. மைசூரு ரோடு காளி ஆஞ்சனேயசாமி கோவில் அருகே புஷ்பா ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் தலைவியாக இருந்து வருகிறார். சூரஜ், ்அவரது தந்தையிடம் ஏராளமான பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர், அதனை பறிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அரசு ஒப்பந்த பணிகளை பெற்று தருவதாக கூறி, சூரஜை கடத்தி ரூ.25 லட்சத்தை பறித்தது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இநத சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ், அய்யப்பா தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்