பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் பாதிப்பு; போலி டாக்டர் உள்பட 2 பேர் கைது
பெங்களூருவில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்து பாதிப்பு ஏற்படுத்திய போலி டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜகோபால்நகர்:
பெண்ணுக்கு பாதிப்பு
பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, ராஜகோபால்நகர் அருகே சஞ்சீவினி நகரில் உள்ள ஒரு கிளினிக்குக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜோதி சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டரான நாகராஜ், ஜோதியை பரிசோதித்து டாக்டர் நாகராஜ், காய்ச்சல் சரியாக ஊசி போட்டு, சில மருந்தையும் கொடுத்தார்.
இதற்கிடையில், ஊசி போட்ட பகுதியில் ஜோதிக்கு வீக்கம் உண்டானது. அவருக்கு உடல் நல பாதிப்பும் அதிகமானது. இதனால் பயந்து போன ஜோதி, மீண்டும் கிளினிக்குக்கு வந்து நாகராஜிடம் தெரிவித்துள்ளார். அதற்கும் அவர் சில மருந்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில், ஜோதிக்கு ஊசி போடப்பட்ட இடத்தில் பெரிய காயம் ஏற்பட்டு, வலியும் அதிகமாக இருந்தது.
போலி டாக்டர் கைது
பின்னர் மீண்டும் கிளினிக்குக்கு சென்று நாகராஜிடம் ஜோதி விசாரித்துள்ளார். அப்போது அவர், வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி ஜோதியிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று போது, ஜோதியை பரிசோதித்துவிட்டு, காயம் அடைந்த பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். இதைகேட்டு ஜோதி மேலும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நாகராஜை சந்தித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறுவது பற்றி ஜோதி கூறியுள்ளார்.
உடனே நடந்த சம்பவங்களை வெளியே சொல்ல வேண்டாம், இதற்காக பணம் தருவதாக நாகராஜ் கூறியதாக தெரிகிறது. அப்போது தான் நாகராஜ் போலி டாக்டர் என்பது ஜோதிக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர், ராஜகோபால்நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டரான நாகராஜ் மற்றும் கிளினிக் நடந்து வந்த கட்டிடத்தின் உரிமையாளர் குமாரசாமியை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.