தத்தா ஜெயந்தி ஊர்வலத்தின்போது சாலையில் ஆணிகளை போட்ட 2 பேர் கைது
தத்தா ஜெயந்தி ஊர்வலத்தின்போது சாலையில் ஆணிகளை போட்ட 2 பேர் கைது செய்ய பட்டனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு சந்திர திரிகோண மலையில் பாபாபுடன்கிரி மலையில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தத்தா ஜெயந்தி விழாவின் முதல் நாளான கடந்த 6-ந்தேதி சிக்கமகளூரு நகரில் அனுசியா ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிக்கமகளூரு நகரில் ஊர்வலமாக வந்தனர். இந்த நிலையில், சிக்கமகளூருவில் இருந்து சந்திர திரிகோண மலைக்கு செல்லும் சாலையில் கைமரம் பகுதியில் சாலையில் மர்மநபர்கள் ஆணிகளை போட்டிருந்தனர். அதாவது, அனுசியா ஜெயந்தி ஊர்வலத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மர்மநபர்கள் ஆணிகளை போட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கிடந்த ஆணிகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து இந்து அமைப்பினர் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சாலையில் ஆணிகளை போட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிக்கமகளூரு துபாய் டவுனை சேர்ந்த முகமது ஷபான் (வயது 29), வாகித் உசேன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.