கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 2 பேர் சாவு; தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகத்தில் கனமழைக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-15 22:30 GMT

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி-ஆகும்பே மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தீவிரம் எடுத்த பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களிலும், மலைநாடு மாவட்டங்களான குடகு, சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடைவிடாது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதுபோல மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக அந்த மாநில எல்லையில் உள்ள வடகர்நாடக மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெலகாவி, விஜயநகர், யாதகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டையில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே இருக்கும் துங்கபத்ரா அணை, யாதகிரி மாவட்டம் உனசகி தாலுகா நாராயணபுரா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே இருக்கும் பசவசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு தலா ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஜூலை மாதத்தில் நிரம்பிய அணை

இதனால் மாநிலத்தில் ஓடும் காவிரி, கபிலா, ஹேமாவதி, நேத்ராவதி, பால்குனி, கிருஷ்ணா, துங்கா, பத்ரா உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் சேதம், விளைநிலங்கள் சேதம், வாகனங்கள் சேதம் உள்ளிட்ட ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

துங்கபத்ரா அணை கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிரம்பி இருந்தது. தற்போது அந்த அணை நிரம்பி விட்டதாக நீர்பாசனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு துங்கபத்ரா அணை ஜூலை மாதத்தில் நிரம்பியுள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொப்பல், ராய்ச்சூர், பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளதால் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன.

அர்ச்சகர் சாவு

இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா முக்குந்தா என்ற கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் உள்ள கரிவீரேஸ்வரா கோவிலில் பூஜை செய்ய அந்த கோவிலின் அர்ச்சகர் லிங்கப்பா பூஜார் என்பவர் நேற்று சென்றார். அப்போது அவர் கிருஷ்ணா ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து லிங்கப்பா உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பெலகாவி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோகாக் தாலுகாவில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சி, கோடசினமக்கி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர். ஆனாலும் வாலிபர்கள் சிலர் ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்று செல்போனில் செல்பி எடுத்து வருகின்றனர்.

50 கிராம மக்கள் பீதி

வேதகங்கா ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் மராட்டிய மாநிலம் இச்சலகரஞ்சி சாலையை இணைக்கும் ஆற்றுப்பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது. கானாப்புரா தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் சுஞ்சனவாடா என்ற கிராமத்தில் நேற்று ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது குடும்பத்தை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர். ஏற்கனவே கனமழைக்கு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவமொக்கா மாவட்டம் பத்ரா அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் பத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளியில் 19 கிராமங்கள், ஹரிஹராவில் 19 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் 50 கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

11 தரைப்பாலங்கள் நாசம்

பெலகாவியில் கனமழைக்கு 11 தரைப்பாலங்கள் ஆற்றில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதில் நிப்பானியில் மட்டும் 6 தரைப்பாலங்கள் அடங்கும். மேலும் சிக்கோடியில் 2 தரைப்பாலங்கள், கோகாக்கில் ஒரு தரைப்பாலம், கானாப்புராவில் 2 தரைப்பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி நாசமாகி உள்ளன.

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி-ஆகும்பே மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

தொடர் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 124.80 அடி கொள்ளளவும் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 123.38 அடி அளவில் இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 76 ஆயிரத்து 117 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 85 ஆயிரத்து 117 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது.

கபினி

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 3 மணி நிலவரப்படி 2,282.17 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.

இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட நீரானது திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 117 கன நீர் தமிழகம் செல்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1.14 லட்சம் கனஅடி சென்ற நிலையில், நேற்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்