2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி சாவு
எருமை மாடுகளை குளிப்பாட்ட சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்தனர்.
சிவமொக்கா-
சிக்கமகளூரு மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிடுகினஹால் மராட்டி கேம்ப் பகுதியை சேர்ந்தவன் கங்காதர்(வயது15). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அதேப்பகுதியை சேர்ந்தவன் சூர்யா(12). இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கங்காதர், சூர்யா ஆகிய 2 பேரும் தங்களின் வீடுகளில் வளர்க்கும் எருமை மாடுகளை, பி.கேம்ப் பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பாட்டுவதற்காக கொண்டு சென்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் எருமை மாடுகளை குளிப்பாட்டி கொண்டு இருந்தனர். அப்போது கங்காதர் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தத்தளித்த கங்காதர் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா, கங்காதரை காப்பாற்றுவதற்காக சென்றான். அப்போது சூர்யாவும் நீரில் மூழ்கினான்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் அவர்கள் 2 பேரையும் தேடினர். பின்னர் சூர்யா, கங்காதர் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். அவர்கள் 2 பேரும் ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.