நக்சல் ஆதிக்க பகுதியை நோக்கி 1,848 கி.மீ. பைக் பயணம்; 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பங்கேற்பு

டெல்லியில் இருந்து நக்சல் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்கார் நோக்கி 1,848 கி.மீ. தொலைவுக்கு 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பைக் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

Update: 2023-03-09 06:18 GMT

புதுடெல்லி,


நாட்டில் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் இருந்து நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த சத்தீஷ்கார் நோக்கி 1,848 கி.மீ. தொலைவுக்கு 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் பங்கேற்கும் பைக் பயணம் இன்று காலை தொடங்கியது.

இதனை மத்திய வெளிவிவகார அமைச்சக இணை மந்திரி மீனாட்சி லேகி இந்தியா கேட் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைத்து உள்ளார். அமைதி மற்றும் நல்லெண்ண செய்தியை பரவ செய்யும் நோக்கில் இந்த பயணம் அமையும் என அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் செய்தியை பரப்பும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயணம் 5 மாநிலங்களின் வழியே கடந்து செல்ல உள்ளது.

இதன்படி ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் 17 நாட்கள் வரை பயணம் மேற்கொண்டு சத்தீஷ்காரின் ஜெகதல்பூரை வருகிற 25-ந்தேதி அவர்கள் அடைய உள்ளனர். அதே நாளில் மத்திய உள்துறை மந்திரி கலந்து கொள்ளும் சி.ஆர்.பி.எப். தின அணிவகுப்பும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். வீராங்கனைகளின் அணிவகுப்பு, மகளிர் வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகியவையும் இடம் பெற்றன.

இதில் கலந்து கொண்ட சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் சுஜோய் லால் தாவோசென் கூறும்போது, பைக் பேரணியில் பங்கேற்றுள்ள பல வீராங்கனைகள் இதற்கு முன் பைக்குகளை ஓட்டிய அனுபவம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் 300 கி.மீ. தொலைவை அடையும் வகையில் பயிற்சி பெற்று உள்ளனர் என கூறினார்.

அவர்களது இந்த பயணத்தில் பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் சுய உதவி குழுவினரையும் சந்தித்து அவர்களுக்கும் ஊக்கம் ஏற்படுத்துகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்