கடந்த 12 நாட்களில் பெங்களூருவில் 18 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.10 லட்சம் அபராதம் வசூல்

பெங்களூருவில் கடந்த 12 நாட்களில் 18 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-14 21:38 GMT

பெங்களூரு:

18 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்

நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஒரு முறை மட்டுமே பிளாஸ்டிக் பைகள், பிற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவை மீறி பெங்களூருவில் ஓட்டல்கள், மளிகை கடைகள், பிற கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தால், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறாா்கள். மேலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெங்களூருவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை செய்யப்பட்ட கடந்த 1-ந் தேதியில் இருந்து 12-ந் தேதி வரை ஒட்டுமொத்தமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதாக கூறி மாநகராட்சிக்கு 2 ஆயிரத்து 938 புகார்கள் வந்திருந்தது. அந்த புகார்களின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கடந்த 12 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 17 ஆயிரத்து 958 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் அவற்றை பயன்படுத்திய நபர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 94 ஆயிரம் அபராதமும் வசூல் செய்துள்ளனர்.

அரசு தெரிவிக்கவில்லை

பெங்களூரு மாநகராட்சியில் அதிகபட்சமாக மேற்கு மண்டலத்தில் மட்டும் 316 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை என்றும், அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கு பதிலாக, வேறு எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்