30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது பண்டிகை கால பயணத்துக்காக 179 சிறப்பு ரெயில்கள்
ரெயில் சேவையில் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது
புதுடெல்லி,
ரெயில் சேவையில் உலகின் 4-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நாள்தோறும் இங்கு சுமார் 3 ஆயிரம் பயணிகள் ரெயிலும், 5660 புறநகர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. தினமும் 2.23 கோடி பயணிகள் ரெயிலில் பயணிக்கிறார்கள்.
இதனால் பயணிகளுக்கு இந்திய ரெயில்வே பல வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்களில் பயணிகளுக்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த மாதம் இனி வர இருக்கிற நாட்களில் தீபாவளி, சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே, அவர்களின் வசதிக்காக 179 சிறப்பு ரெயில்கள் நாடு முழுவதும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே நேற்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இவை மூலம் 2269 பயணங்கள் கூடுதலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.