தூக்கி எறியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகை விலைமதிப்பற்ற உலோகங்கள்: பிரதமர் மோடி பேச்சு

தூக்கி எறியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகை விலைமதிப்பற்ற உலோகங்களை பிரித்து எடுக்கலாம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-01-29 07:59 GMT


புதுடெல்லி,


பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இதனை தொடர்ந்து, 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. அதன்படி, பிரதமர் மோடியின் வானொலி வழியேயான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது.

இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற பெருமையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களுடன் உரையாடுவது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது என கூறி தனது பேச்சை தொடங்கினார். இதில், நாட்டில் பத்ம விருதுகளை பெற்றவர்கள் பற்றியும், பழங்குடியினர், அவர்களது பாரம்பரியம் மற்றும் நமது நாட்டு பாரம்பரிய இசை கருவிகள், யோகா மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றை பற்றியும் அவற்றின் சுகாதார பயன்கள் பற்றியும் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, கோவாவின் பனாஜி நகரில், கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையில் பர்ப்பிள் பெஸ்ட் என்ற மாற்று திறனாளிகள் நலனுக்கான திருவிழா நடைபெற்றது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவாவின் பிரசித்தி பெற்ற மீராமர் பீச்சில் முழு அளவில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என அறிந்து மக்கள் பரவசமடைந்து உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் 5 கோடி டன் இ-கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தூக்கி எறியப்படும் இ-கழிவுகளில் இருந்து, 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங்களை வெவ்வேறு நடைமுறைகளின் வழியே நாம் பிரித்து எடுக்க முடியும்.

ஒருவர் தனது பழைய கருவிகளை மாற்றும்போது, அது முறையாக குப்பைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி கவனம் கொள்வது அவசியம். இ-கழிவுகள் முறையாக நீக்கப்படவில்லை எனில், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். கவனமுடன் கையாளப்பட்டால், பொருளாதார மீட்சிக்கான மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கான ஆற்றல் மிக்க சக்தியாக அது மாறும் என பேசியுள்ளார்.

தொடர்ந்து நமது நாட்டிலுள்ள ராம்சர் நிலங்களை பற்றியும் அவர் பேசியுள்ளார். எந்த நாட்டிலும் ஈர நிலங்கள் காணப்படலாம். ஆனால், அவை பல அடிப்படை விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின்னரே அவை ராம்சர் நிலங்களாக அறிவிக்கப்படும். நமது நாட்டில் தற்போது ராம்சர் நிலங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆக அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 26 ராம்சர் நிலங்களே இருந்தன என அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்