ரூ.16,133 கோடி வட்டி பாக்கிக்காகவோடபோன் பங்குகளை மத்திய அரசுக்கு வழங்க முடிவு
மொத்தம் ரூ.16 ஆயிரத்து 133 கோடி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளது.
புதுடெல்லி,
வோடபோன் ஐடியா செல்போன் சேவை நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்ததில், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தவணையை தாமதப்படுத்தியதால், வட்டி செலுத்த வேண்டி உள்ளது. அத்துடன், ஏ.ஜி.ஆர். கட்டணத்திலும் பாக்கி வைத்துள்ளது. மொத்தம் ரூ.16 ஆயிரத்து 133 கோடி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளது.
இந்த பாக்கித்தொகையை தனது கம்பெனியின் சம பங்குகளாக மாற்றி மத்திய அரசுக்கு அளிக்க வோடபோன் ஐடியா விருப்பம் தெரிவித்தது. அதற்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து, தலா ரூ.10 முக மதிப்பு கொண்ட 1,613 கோடியே 31 லட்சம் சம பங்குகள், அதே விலைக்கு மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்று வோடபோன் ஐடியா கூறியுள்ளது.
இதன்மூலம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 35 சதவீத பங்குகள் மத்திய அரசு வசம் செல்கிறது.