இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு புதிதாக 16 லட்சம் பேர் சேர்ப்பு
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு புதிதாக 16 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா கூறினார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
பறக்கும் படைகள்
224 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் கால அட்டவணை கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் பறக்கும் படைகள், தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறோம்.
தேர்தல் நடத்தை விதிகள்
இந்த சோதனையில் இதுவரை ரூ.88 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரத்து 632 ரொக்கம், ரூ.20 கோடியே 62 லட்சத்து 10 ஆயிரத்து 64 மதிப்புள்ள பரிசு பொருட்கள், ரூ.59 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 246 மதிப்புள்ள மதுபானம், ரூ.17 கோடியே 14 லட்சத்து 78 ஆயிரத்து 171 மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.75 கோடியே 15 லட்சத்து 3 ஆயிரத்து 492 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 97 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.265 கோடியே 20 லட்சத்து 4 ஆயிரத்து 702 ஆகும்.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி ரொக்கம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் தொடர்பாக 2 ஆயிரத்து 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்லாரி நகர், ஒசக்கோட்டை, சித்ரதுர்கா, எலகங்கா ஆகிய தொகுதிகளில் அதிக வேட்பாளர்களும், யமகனமரடி, தேவதுர்கா, தீர்த்தஹள்ளி, குந்தாப்புரா, காபு, மங்களூரு, பண்ட்வால் ஆகிய தொகுதிகளில் குறைந்த அளவில் வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.
புதிதாக சேர்ப்பு
சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 20-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் புதிதாக 16 லட்சத்து 4 ஆயிரத்து 285 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.
தயார் நிலை
இவற்றில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 ஆக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேரும், வெளிநாட்டு வாழ் கர்நாடக வாக்காளர்கள் 3 ஆயிரத்து 48 பேரும் உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 253 அலுவலர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தேர்தல் பணிக்கு தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 752 ஆகும். தேர்தல் பணியை மேற்கொள்ள அலுவலர்கள், தேவையை விட அதிகமாக உள்ளனர். அதே போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தேவையை விட அதிகமாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு மனோஜ்குமார் மீனா கூறினார்.
பேட்டியின்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார் உடன் இருந்தனர்.