நீடிக்கும் கலவரம் எதிரொலி: மிசோரம் பள்ளிகளுக்கு மாறும் மணிப்பூர் குழந்தைகள்

மணிப்பூரில் கலவரம் நீடிப்பதால் அந்த மாநில குழந்தைகள் அண்டை மாநிலமான மிசோரமில் உள்ள பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.

Update: 2023-06-21 22:09 GMT

கோப்புப்படம்

அய்ஸ்வால்,

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் நடந்து வரும் கலவரம் மாநிலத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. அங்கு 50 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

மணிப்பூரின் பல மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

இந்த கலவரம் இன்னும் ஓயாததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இலவசமாக இடம்

இதனால் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் அண்டை மாநிலமான மிசோரமில் உள்ள பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர். இதுவரை 1,500-க்கு மேற்பட்ட குழந்தைகள் இவ்வாறு அந்த மாநில பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மிசோரம் கல்வித்துறை இயக்குனர் லால்சங்லியானா தெரிவித்தார்.

இந்த குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் இலவசமாக இடம் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களால் போதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாவிட்டாலும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவர்களை பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

அகதிகளாக தஞ்சம்

இதற்கிடையே கலவரம் பாதித்த மணிப்பூரில் இருந்து 11,800-க்கும் அதிகமானோர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள மிசோரம் அரசு, இதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதியுதவியையும் எதிர்பார்த்து வருகிறது. மணிப்பூரில் இருந்து வந்துள்ள மக்களை பராமரிப்பதற்கு மத்திய அரசிடம் ரூ.10 கோடி கேட்டிருப்பதாக மிசோரம் உள்துறை செயலளர் லாலெங்மாவியா தெரிவித்தார்.

முன்னதாக இந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை அவர் நடத்தினார். பருவமழை விரைவில் வர இருப்பதால், இந்த மக்களை தங்க வைப்பதற்காக போதிய கட்டிடங்களை ஏற்பாடு செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் இந்த பராமரிப்பு பணிகளுக்காக எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து நன்கொடை திரட்டவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் மணிப்பூர் கிழக்கு மாவட்டத்தின் தாங்ஜிங் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இதைப்போல காங்சப் பகுதியிலும் இரவில் விட்டுவிட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் அரங்கேறின. இநத சம்பவங்களில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அங்கு ராணுவம் முகாமிட்டு பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்