2 அரசு ஊழியர்கள் வீட்டில் ரூ.14 லட்சம் தங்கநகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு

சிவமொக்கா டவுனில், 2 அரசு ஊழியா்கள் வீட்டில் ரூ.14 லட்சம் தங்கநகை, வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வவைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-07-14 15:31 GMT

சிவமொக்கா;

ரூ.10½ லட்சம் தங்கம், வெள்ளிப்பொருட்கள்

சிவமொக்கா டவுன் பசவனகுடி பகுதியில் வசித்து வருபவர் சைத்ரா. இவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.

இதையறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இதையடுத்து வீ்ட்டில் பீரோவில் இருந்த தங்கம்-வெள்ளி நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சைத்ரா, வீட்டின் கதவின் பூட்டு உடைத்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் இருந்த 256 கிராம் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.10½ லட்சம் இருக்கும். அப்போது தான் அவருக்கு மா்மநபர்கள் வீட்டில் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

மா்மநபர்களுக்கு வலைவீச்சு

இதேபோல், சிவமொக்கா டவுன் பால்ராஜ் அர்ஸ் சாலையில் உள்ள பொதுபணித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் ஷேக் முகமது ரபி. இவர் தனது வீ்ட்டை பூட்டிவிட்டு பத்ராவதியில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 79 கிராம் தங்கநகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.3.40 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து 2 அரசு ஊழியர்களும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்