மனைவிக்கு சித்ரவதை: அரசு ஆஸ்பத்திரி ஊழியருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி மனைவியை சித்ரவதை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி சித்ரதுர்கா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-11-19 18:45 GMT

சிவமொக்கா:

முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி மனைவியை சித்ரவதை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி சித்ரதுர்கா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காதல் திருமணம்

சித்ரதுர்கா மாவட்டம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர்(வயது 38). அதேபோல சிவமொக்கா மாவட்டம் தீர்த்த ஹள்ளியை சேர்ந்தவர் உமா(35). சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் அப்துல் காதரும் வேலை பார்த்து வந்தார். உமா ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்று கூறப்படுகிறது. முதல் கணவன் சீனிவாசனை பிரிந்த அவர், 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உமா மற்றும் அப்துல் காதருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.

2020-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்தது. இருவரும் சித்ரதுர்கா நேருநகரில் வசித்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

மத மாற்ற முயற்சி

இதையடுத்து உமாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது 2 கால்களும் செயல் இழந்தன. இதனால் அவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி அப்துல் காதர் உமாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் முஸ்லிம் மதத்திற்கு மாறும்படி தொல்லை கொடுத்துள்ளார். இது உமாவிற்கு பிடிக்கவில்லை. மதம் மாற முடியாது என்றார். இதனால் அப்துல் காதர் உமாவை தாக்க தொடங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அப்துல் காதர், உமாவை தாக்கினார். இதில் உமாவின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உமா கொடுத்த புகாரின் பேரில் சித்ரதுர்கா போலீசார் அப்துல்காதரை கைது செய்தனர்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்

அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று சித்ரதுர்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் அப்துல் காதரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் வருகிற டிசம்பர் 1-ந் தேதி அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அப்துல் காதர் சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்