ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த 130 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 130 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருவதையடுத்து, போதைப்பொருட்களை கடத்தும் கும்பலின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில் , மூலை முடுக்கெல்லாம் கஞ்சா உள்பட போதை பொருட்களை கடத்தும் ஆசாமிகள் ஊடுருவி உள்ளனர்.
இந்த நிலையில் மலப்புரம் துணை கமிஷனர் டி. அணில்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் நிலம்பூர் வழிக்கடவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை வழிமறித்து கலால்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த காரின் அடிப்பகுதியில் ரகசிய இடம் அமைத்து அதில் 130 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த மலப்புரத்தை சேர்ந்த நவாஸ் ஷெரீப், முகம்மது ஷபீக், அப்துல் அகமது, பாலுசேரியை சேர்ந்த அமல், பத்தனம்திட்டையை சேர்ந்த ஷகத் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒணத்தை முன்னிட்டு சில்லரை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வந்தது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.