முன்னாள் கவுன்சிலர் உள்பட 12 பேர் விடுதலை
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கொலை வழக்கில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 12 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு,
சட்ட ஆர்வலர் கொலை
பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் லிங்கராஜ். இவர், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராகவும், ஒரு பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் இருந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி தனது வீட்டின் அருகே 3 நபர்களால் லிங்கராஜ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், அவரது மனைவி கவுரம்மா உள்பட 12 பேரை கைது செய்தார்கள்.
கோவிந்தராஜ் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனைக்கு லிங்கராஜ் காரணம் என்பதால், அவரை கொலை செய்தது தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் 12 பேர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி, லிங்கராஜ் கொலை வழக்கில் முன்னாள் கவுன்சிலர், அவரது மனைவி உள்பட 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிட்டி சிவில் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருந்தது.
12 பேரும் விடுதலை
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் 12 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் சோமசேகர், சிவசங்கரகவுடா ஆகிய 2 பேர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். அப்போது தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லிங்கராஜ் கொலை வழக்கில் கைதான 12 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியுள்ளனர்.
அதாவது முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், அவரது மனைவி கவுரம்மா, ரங்கசாமி, ஆர்.சங்கர், ராகவேந்திரா, மற்றொரு சங்கர், சுரேஷ், சந்திரா, உமா சங்கர், வேலு, ஜாகீர், லோகநாத் ஆகிய 12 பேருக்கும் சிட்டி சிவில் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்திருப்பதுடன், அவர்களை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர். லிங்கராஜ் கொலையில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிபதிகள் 12 பேரையும் விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.