ரூ.114 கோடி சொத்துக்கள், வங்கி மோசடி வழக்குடன் இணைப்பு

வாடிக்கையாளர்களின் முதலீடுகளை மோசடி செய்த வழக்கில், ரூ.114 கோடி சொத்துக்களை வழக்குடன் அமலாக்கத்துறை இணைத்தது.

Update: 2023-03-29 23:25 GMT

பசவனகுடி:-

கூடுதல் வட்டி

பெங்களூரு பசவனகுடி பகுதியில் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பலர் முதலீடு செய்து இருந்தனர். ஆனால் அவர்களது டெபாசிட் காலம் முடிந்த பிறகும், முதலீட்டு தொகை மற்றும் வட்டியை வங்கி நிர்வாகிகள் வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் பசவனகுடி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கி சார்பில் வாடிக்கையாளர் களிடம் பெறப்பட்ட முதலீட்டு தொகை சட்டவிரோதமாக பல்வேறு வங்கி கணக்கு களுக்கு மாற்றி, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணமோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

4 பேர் கைது

இதையடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் கைமாறியது. அவர்கள் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக முதலீட்டு பணத்தை கொண்டு சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிந்தது. இதுதொடர்பாக அப்போதைய வங்கி தலைவர் ராமகிருஷ்ணா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சொந்தமான 21 அசையா சொத்துக்கள், ரூ.3¼ கோடி வங்கி டெபாசிட் உள்பட ரூ.114 கோடியை சொத்துக்களை மோசடி வழக்குடன் அமலாக்கத்துறை இணைத்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்குடன் தொடர்புடையதாக ரூ.45 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்