111 பேனாக்கள், 3 மாதங்கள்... அன்பை வெளிப்படுத்த மனைவிக்கு 1,000 பக்க கடிதம் எழுதிய நபர்
கிராமத்தில் வசித்த தனது மனைவிக்கு அன்பை வெளிப்படுத்த ஐ.டி. அதிகாரி ஒருவர், 3 மாதங்கள் 3 நாட்களாக 1,000 பக்க கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
மீரட்,
உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த பல பரிசு பொருட்களை பரஸ்பரம் பரிமாறி கொள்வது வழக்கம். இதேபோன்று, 24 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய அளவில் தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு அன்பின் வெளிப்பாடாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் தற்போது வசித்து வரும் ஜீவன் சிங் பிஸ்த் (வயது 63) என்ற அந்நபர், தனது கடந்த கால காதல் பற்றி விவரிக்கிறார். உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் சபத் கிராமத்தில் வசித்தபோது ஜீவன் சிங்குக்கு, இளம் பருவத்தில் சிறுமி கமலா மீது காதல் ஏற்பட்டு உள்ளது.
அதற்கு ஈடாக ஜீவன் மீது கமலாவும் காதலில் இருந்து உள்ளார். இந்த காதல் விரைவாக திருமணத்தில் முடிந்து உள்ளது. அவர்களுக்கு 2 குழந்தைகள். வழக்கம்போல் திருமணம் ஆனபின்னர், ஜீவனுக்கு வருமான வரி துறையில் நல்ல வேலை கிடைத்தது. அதனால், பணி நிமித்தம் மீரட்டுக்கு மனைவியுடன் சென்று உள்ளார்.
எனினும், குடும்ப நலனை கவனிக்கும் நோக்கில் கமலா கிராமத்திற்கு திரும்பினார். ஜீவன் மட்டும் மீரட்டில் இருந்தபடி பணியாற்றி வந்து உள்ளார். எப்போதேனும், விடுமுறையின்போது ஊருக்கு வந்து, சென்றுள்ளார்.
இந்நிலையில், கிராமத்தில் 2 குழந்தைகளுடன் வசிக்கும் தனது மனைவிக்கு அன்பை வெளிப்படுத்த ஜீவன் சிங் நினைத்துள்ளார். பணி நிமித்தம் வெளியூரில் தங்கியிருந்து பணியாற்றிய ஜீவன் சிங், 24 ஆண்டுகளுக்கு முன் மனைவிக்கு 1,000 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
இதற்கு அவருக்கு 111 பேனாக்கள் தேவைப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் மற்றும் 3 நாட்கள் எடுத்து கொண்டுள்ளார். அந்த ஒரு கடிதத்தின் எடை மட்டும் 8 கிலோ இருந்து உள்ளது.
இவரது காதல் உணர்வுகளை சுமக்கும் அந்த கடிதம் கண்டவுடன் அவரது மனைவி கமலா மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயுள்ளார். இந்த கடிதம் எழுதி முடிப்பதற்காக, ஜீவன் சிங் ஒரு வாரம் பணியில் இருந்து விடுமுறையும் எடுத்து உள்ளார்.
அவருக்கு மனைவி கமலாவும் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இவர்கள் இருவர் இடையே, காதலின் அடையாள சின்னம்போல் உள்ள அந்த கடிதத்தினை அவர் இன்னும் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.
அந்த கடிதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். கடிதம் அனுப்ப மட்டும் அந்த காலத்திலேயே ஜீவன் ரூ.700 வரை செலவிட்டு உள்ளார்.