மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; பீகாரை சேர்ந்த 4 பேர் கைது

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த 4 பேர்கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-06 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் கலா மஞ்சுநாத். இவரது முதல் மகன் மனோஜ், ஹாசன் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகனான ஜீவன் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார். ஆனால் நீட் தேர்வில் ஜீவன் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். மீண்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க ஜீவன் தயாராகி வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி கலா மஞ்சுநாத் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பதாகவும், ரூ.75 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு கலா மஞ்சுநாத் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரூ.60 லட்சம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு குறுந்தகவல் அனுப்பிய நபர்களும் சம்மதம் தெரிவித்து இருந்தனர். தாவணகெரேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் கொடுப்பதாகவும் கூறி இருந்தனர். பின்னர் பெங்களூருவுக்கு வந்த கலா மஞ்சுநாத், அவரது மகன் ஜீவன் ஆகிய 2 பேரும் கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து ரோசினி மற்றும் யோகேஷ் என்பவர்களை சந்தித்து பேசினார்கள்.

அப்போது மருத்துவ கல்லூரி சீட் வாங்கி கொடுப்பதற்காக முதலில் தங்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று ரோசினி, யோகேஷ் தெரிவித்துள்ளனர். இதற்காக முதலில் ரூ.5 லட்சத்தையும், அதன்பிறகு ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்தையும் கலா மஞ்சுநாத் கொடுத்திருந்தார். ரோசினி கூறிய வங்கி கணக்குகளுக்கு அந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் ரோசினியும், யோகேசும் தங்களது நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளை சந்தித்து பேச அழைத்து செல்வதாகவும், அங்கு வைத்து மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை கொடுப்பதாகவும் கலா மஞ்சுநாத்திடம் கூறி இருந்தார்கள். ஆனால் பணத்தை பெறறுக்கொண்ட பின்பு ரோசினி, யோகேஷ் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ரூ.10.90 லட்சம் மோசடி செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த நிகில், அசுதோஷ், பசந்த்குமார், ஆசிஷ் ஆனந்த் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேரும் சேர்ந்து ரோசினி, யோகேஷ் சேர்ந்து பெங்களூருவில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ஒரு அலுவலகத்தை திறந்துள்ளனர். பின்னர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பதாக கூறி பணம் பெற்று மோசடி செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் ரோசினி, யோகேசை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்