திருட்டு, கொள்ளை வழக்குகளில் 106 பேர் கைது-ரூ.2½ கோடி பொருட்கள் பறிமுதல்

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 106 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான தங்க நகைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-07 18:45 GMT

பெங்களூரு:-

தயானந்த் பார்வையிட்டார்

பெங்களூரு மத்திய மண்டல போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்திருந்தார்கள். அந்த கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த நகைகள், பொருட்களை போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.2½ கோடி மதிப்பு

பெங்களூருவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய மண்டலத்தில் உள்ள விவேக்நகர், அசோக்நகர், அல்சூர்கேட், வயாலிகாவல், சேஷாத்திரிபுரம், சதாசிவநகர் உள்ளிட்ட போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 106 பேரை கைது செய்துள்ளனர்.

கைதான நபர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய 2 கிலோ 110 கிராம் தங்க நகைகள், 105 கிலோ வெள்ளி பொருட்கள், 113 செல்போன்கள், வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்திருந்தார்கள். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 69 லட்சம் ஆகும்.

103 வழக்குகளில் தீர்வு

இதன்மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 103 குற்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த மத்திய மண்டல போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசகவுடா உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்