ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் 10 பேர் கைது - அதிரடிப்படை போலீசார் நடவடிக்கை

சத்தியவேடு அருகே 10 செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-09-07 07:01 GMT

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் சத்தியவேடு தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரம் மண்டலம் சத்திகுடுமடுகு பகுதியில் அதிரடிப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களை அவர்கள் சோதனை செய்வதற்காக நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் மோட்டார்சைக்கிள்கள் நிற்காமல் சென்றன. சுதாரித்துக்கொண்ட அதிரடிப்படை போலீசார் விரட்டிச்சென்று 10 பேரை மடக்கினர். அவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் கே.சிவபிரசாத் (வயது 23), என்.சிவக்குமார் (28), என்.சுப்ரமணியம் (43), கஹிகல லோகேஷ் (29), கே.ரகுவர்மா (21), கடியாலா குமார் (22), வி.நரசிம்முலு (39), சதலா நரசிம்மா (21), அசோக் (29), நாணுமங்கலம் முனுசாமி (64) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அவர்கள் 10 பேரையும் அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 236 கிலோ எடையுள்ள 26 செம்மரக்கட்டைகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மேதா சுந்தர ராவ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் அதிரடிப்படை போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்