மண்டியா சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
மண்டியாவில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
மண்டியா:
கண்டிக்க முடியாது
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் காவிரி, ஹேமாவதி, லட்சுமணதீர்த்த ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-
மண்டியா மாவட்டம் மலவள்ளியில் சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சமுதாயத்தில் எப்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது. இது மிகவும் கொடூரமான சம்பவம். மனிதத்துவம் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவார்கள். இதை வெறும் வார்த்தைகளால் கண்டிக்க முடியாது.
தண்டனை உறுதி
ஒன்றும் அறியாத சிறுமியின் நிலையை நினைத்து பார்த்தால் வேதனை அளிப்பதாக உள்ளது. போலீசார் விரைந்து செயல்பட்டு தவறு செய்தவர்களை கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த சம்பவம் குறித்த விசாரணையை விரைவாக நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
மீண்டும் ஒருமுறை இத்தகைய சம்பவத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு, தண்டனை விரைவாக கிடைக்கும் என்ற தகவலை வெளிப்படுத்தும் வகையில் தீர்ப்பு விரைவாக வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். உங்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதே தான் எங்கள் மனதிலும் உள்ளது.
மோசமான சம்பவங்கள்
உங்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மனித மாண்புகள் குறைந்துவிட்டதால் சமுதாயத்தில் இத்தகைய மோசமான சம்பவங்கள் நிகழ்கின்றன. சரி எது, தவறு எது என்பதில் தெளிவு இல்லை. பயம், பக்தி இல்லை. இவைகள் இருக்க வேண்டுமென்றால் பண்பாடு, கலாசாரம் இருக்க வேண்டும். நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும்.
கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. சில பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட 2.30 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளோம். மண்டியா மாவட்டத்தில் வெள்ளத்தால் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினோம்.
நிவாரண நிதி
முன்பு மழையால் பயிர்கள் நாசம் அடைந்தால் நிவாரணம் வழங்க 1½ ஆண்டுகள் ஆகும். நான் முதல்-மந்திரி ஆன பிறகு நிவாரணம் வழங்கும் பணிகளை 1½ மாதங்களில் நிறைவு செய்கிறோம். சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நிவாரண நிதி வரவு வைக்கப்படுகிறது. வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் வழங்குகிறோம்.
பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையில் மழை பெய்தால் நீர் நின்று போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. அந்த சாலையில் மழை வெள்ளம் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.