கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு 10 கல்லூரிகள் தொடக்கமா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்

கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு 10 கல்லூரிகள் தொடங்கப்படுவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.

Update: 2022-12-01 18:45 GMT

பெங்களூரு:

எல்லை பிரச்சினை

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி கெங்கல் ஹனுமந்தய்யா நினைவு நாளையொட்டி விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடகம்-மராட்டியம் இடையேயான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த எல்லை பிரச்சினையில் கர்நாடகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மராட்டியம் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுகுறித்து கர்நாடகம் தனது வாதத்தை எடுத்து வைக்கும்.

அரசின் முடிவு கிடையாது

கர்நாடகத்தின் நிலைப்பாடு அரசியல் அமைப்பு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சரியானது. நமது வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து அம்சங்களையும் எடுத்து கூறுவார்கள். பா.ஜனதாவில் ரவுடிகளுக்கு இடம் இல்லை. இந்த விஷயத்தில் எங்கள் கட்சி தெளிவாக உள்ளது. எங்கள் கட்சியில் ரவுடிகள் சேருவதை அனுமதிக்க மாட்டோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

முஸ்லிம் பெண்களுக்கு தனியாக 10 கல்லூரிகள் தொடங்குவது குறித்து வக்பு வாரிய தலைவர் கூறியுள்ளார். அதுபற்றி அரசு மட்டத்தில் ஆலோசிக்கவில்லை. அந்த வாரிய நிர்வாகி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். இது அரசின் முடிவு கிடையாது. இதுபோன்ற முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு வக்பு வாரிய தலைவர் அரசுடன் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், முனிசாமி எம்.பி. மற்றும் கெங்கல் ஹனுமந்தய்யாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

ஹிஜாப் அணிந்துவர...

வக்பு வாரிய தலைவர் நேற்று முன்தினம் கூறுகையில், கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு தனியாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், அதில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இந்துமத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம் பெண்களுக்கு தனியாக கல்லூரி தொடங்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும், முதலில் இந்து பெண்களுக்கு தனியாக கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கர்நாடக அரசின் வக்பு வாரியத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பசவராஜ் பொம்மை இந்த கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்