உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1¾ கோடி தங்க நகைகள் பறிமுதல்
கதக் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1¾ கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு:
தேர்தல் பணிகள்
கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். வாக்காளர்களை கவருவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வினியோகம் செய்யும் பணியை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கதக் மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார், மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கதக் டவுன் பகுதியில் உள்ள சோதனை சாவடி வழியாக கார் ஒன்று சென்றது. அந்த காரை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.
4 கிலோ தங்கம்
அப்போது அதில் குவியல் குவியலாக தங்க நகைகள் இருந்தன. அதுகுறித்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், மும்பைக்கு அந்த நகைகள் கடத்தப்படுவதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என கூறப்படுகிறது. இதேபோல் முலகுண்டா சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த வழியாக காரில் எடுத்து சென்ற ரூ.24 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பாதாமி நோக்கி சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.4 லட்சம் இருந்தது தெரிந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.