மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
குக்கர் குண்டு வெடிப்பு
மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் அந்த குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் (வயது24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்பதால், இதை என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தவிட கோரி மத்திய அரசின் உள்துறைக்கு கர்நாடக போலீஸ் துறை பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், "நாட்டின் நலன் கருதி மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ. விசாணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயல்
இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. மூலம் விசாரிக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தோம். அந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.