வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக புகாா்: சிலுமே நிறுவனம் மீது வழக்குப்பதிந்து விசாரணை

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக எழுந்த புகார் தொடர்பாக சிலுமே நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-18 21:34 GMT

பெங்களூரு: பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக எழுந்த புகார் தொடர்பாக சிலுமே நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு புகார்

பெங்களூரு மாநகராட்சி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான பணியை சிலுமே என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது. அந்த நிறுவனம், காங்கிரசுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் இதில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரசார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த முறைகேடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாகவும், இதில் முதல்-மந்திரி உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் காங்கிரசார் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ்பொம்ைம, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும், எத்தகைய விசாரணைக்கும் தயார் என்றும் அறிவித்தார். அத்துடன் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் சிலுமே நிறுவனம் மீது பெங்களூரு மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும்படி பெங்களூரு மண்டல கமிஷனருக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வழக்குப்பதிவு செய்து விசாரணை

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக சிலுமே நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரி மாநகராட்சி சார்பில் அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த நிறுவனத்தை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் இயக்குனர் தனது அலுவலகத்தை காலி செய்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகள் சிலுமே நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தி தகவல்களை திரட்டுவார்கள். அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவானதும், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை

சிலுமே நிறுவனத்திற்கு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளும்படி மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. அந்த நிறுவனம் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக என்னை(பிரதாப் ரெட்டி) நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்களும் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதால், தற்சமயம் வேறு எந்த தகவலும் தெரிவிக்க இயலாது. வாக்காளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்