ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நாளை தெலுங்கானா செல்கிறது...!

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை மீண்டும் கர்நாடகத்திற்கு வந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கானாவுக்கு செல்கிறது.

Update: 2022-10-21 22:51 GMT



பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். அங்கிருந்து தொடங்கிய அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. அதன் பிறகு அதே மாதம் 30-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல்காந்திக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரியில் 15 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் ஆந்திராவில் பாதயாத்திரை நடைபெற்றது.

இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நேற்று மீண்டும் கர்நாடக எல்லையான ராய்ச்சூருக்கு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது தேசிய அளவில் 44-வது நாள் மற்றும் கர்நாடகத்தில் நடைபெற்ற 16-வது நாள் நடைபயணம் ஆகும். நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. அங்கிருந்து ராய்ச்சூர் மாவட்டம் கில்லசுகுரு கிராமத்தில் நுழைந்து, அங்கிருந்து நடைபயணம் நீடித்தது. அங்கு ராகுல்காந்தி காலை நேர ஓய்வு எடுத்தார்.

அதன் பிறகு மாலை 4 மணிக்கு அதே மாவட்டத்தில் கெரேபுத்தூர் கிராமத்தில் இருந்து பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது. இரவு 7 மணிக்கு அந்த பாதயாத்திரை எரகேரே கிராமத்தில் உள்ள வால்மீகி சர்க்கிளில் நிறைவடைந்தது. அதே கிராமத்தில் ராகுல் காந்தி தங்கினார். இந்த பாதயாத்திரையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அந்த கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெலுங்கானா மாநிலத்திற்கு செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்