தூத்துக்குடியில் கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
அரசுக்கும், மீனவர்களுக்கும் பாலமாக செயல்பட கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி:
அரசுக்கும், மீனவர்களுக்கும் பாலமாக செயல்பட கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
கடல் நண்பன்
2022-23-ம் ஆண்டு மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நண்பன் (சாகர் மித்ரா) பணியாளராக பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அரசுக்கும், மீனவர்களுக்கும் பாலமாக இருந்து மீனவர்களின் கடல் மீன்வளம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபராக மீனவ கிராமத்தில் செயல்படுவார்கள்.
அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் பணிகள் குறித்தும் உள்ளூர் மீனவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வானிலை முன்னறிவிப்பு செய்திகள், மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகள் மற்றும் இயற்கை பேரிடர்கள், கடல் சீற்றங்கள் குறித்த தகவல்களை மீனவர்களுக்கு அறிவித்தல், தினசரி மீன்பிடிப்பு, மீன்பிடி படகுகள் தொழிலுக்கு செல்வது மற்றும் திரும்புவது, மீன்களின் விலை மற்றும் விற்பனை போன்ற தகவல்களை சேகரித்து அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
நியமன ஆணை
இந்த சாகர் மித்ரா பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்தது. மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் விஜயராகவன் வரவேற்று பேசினார்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பல்வேறு நலத்திட்டங்கள்
மீனவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை கனிமொழி எம்.பி. செய்து வருகிறார். பெரியதாழையில் பள்ளி கட்டிட பணிக்காக ரூ.1 கோடி வழங்கினார். மீன்பிடித்தலில் உள்ள இடையூறுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம், தடுப்பு சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர் கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு பல நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். மீன்பிடித்தல் குறைந்தகால நிவாரணம் ரூ.6 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு கப்பல் மெக்கானிக், மாலுமி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மீன்வளக்கல்லூரியில் மீனவர்களுக்கு 5 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை தற்போது 20 சதவீதமாக முதல்-அமைச்சர் உயர்த்தி தந்துள்ளார். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும். தமிழக மீன்வளத்துறை இந்தியாவிலேயே முதன்மையானதாக வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் பாலசரசுவதி, வயோலா, ஆய்வாளர் இந்துஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குளங்கள் ஆய்வு
உடன்குடி யூனியனில் உள்ள அய்யனார் குளம், தண்டுபத்து குளம், தண்டுபத்து வடக்கு குளம், மானாட்சிகுளம், குண்டாங்கரை குளம், சிறுகுளம், இடையர்குளம், தேரி குண்டாங்கரை, தருவைக்குளம் ஆகிய 9 குளங்களுக்கு நிரந்தரமாக நீர்வரத்து கால்வாய் அமைத்து தண்ணீர் தேக்க நடவடிக்கை ேமற்கொள்ளப்படுகிறது. மேலும் செட்டியாபத்து ஊராட்சி தேரியூர் அருகே புதிதாக 2 குளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அனைத்து குளங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குளங்கள் சீரமைப்பால் நிலத்தடிநீர் மட்டம் உயர்வது, விவசாய பணிகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவை குறித்து விவசாயிகள், பொதுமக்களிடம் அமைச்சர் கலந்துரையாடினார்.
ஆய்வின்போது கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி நகர பஞ்சாயத்து தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத்தலைவர் மால்ராஜேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் செட்டியாபத்து பாலமுருகன், வெள்ளாளன்விளை ராஜரத்தினம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.