தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண்போலீசார் சஸ்பெண்டு

போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவத்தில் தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசாரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2022-05-18 13:11 GMT
தூத்துக்குடி:
போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவத்தில் தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசாரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
நகை மாயம்
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு திருமண விழா நடந்தது. அங்குள்ள மணமகள் அறையில் வைத்திருந்த 10 பவுன் நகை திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியை சேர்ந்த சுமதி (வயது 42) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைக்காக இரவு 10 மணிக்கு மேல் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, சுமதியை போலீசார் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட சுமதி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
போலீசில் புகார்
இதையடுத்து சுமதி தன்னை போலீசார் தாக்கியதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களை கனிவோடு நடத்த வேண்டும். விசாரணையின்போது யாரையும் துன்புறுத்தக்கூடாது என்று ஏற்கனவே போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதையும் மீறி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்து சுமதியை, பெண் போலீசார் அடித்து துன்புறுத்தியதும், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் பெண்ணை இரவு 10 மணிக்கு மேல் போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 
பணியிடை நீக்கம்
இதையடுத்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, பெண் போலீஸ் ஏட்டு மேக்சினா, போலீசார் உமா மகேசுவரி, கல்பனா ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க தவறியதாக தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகன் ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்