மீஞ்சூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது
மீஞ்சூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த கொண்டகரையை சேர்ந்தவர் மனோகரன் (வயது 35). அ.தி.மு.க.வை சேர்ந்தவர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் கொண்டகரை ஊராட்சிமன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.
இவருக்கு சர்மிளா (34) என்ற மனைவியும், ரக்சன் என்ற மகனும், ரக்சிதா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 15-ந்தேதி மனோகரன் கொண்டகரை ஊராட்சியில் அடங்கிய குருவிமேடு கிராமத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விட்டு இரவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று வழிமறித்து மோதிய நிலையில் கார் பள்ளத்தில் இறங்கியது.
காரில் இருந்த மனோகரன் கீழே இறங்கினர். டிப்பர் லாரியில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை பார்த்த மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும், மனைவி மகன், மகள் கண்ணெதிரிலேயே மனோகரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு லாரியில் மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து மனோகரனின் மனைவி சர்மிளா மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப்ராய்ரத்தோர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், எண்ணூர் சரக போலீஸ் உதவி கமிஷனர் பிரமானந்தம் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கைபேசி அழைப்புகள் விவரத்தின் அடிப்படையில் வெள்ளிவாயல்சாவடி கிராமத்தை சார்ந்தவரும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான சுந்தர் என்கிற சுந்தரபாண்டியன் (43), அவரது டிரைவர் பத்மநாபன், உறவினர் அரவிந்த்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சுந்தர் என்கிற சுந்தரபாண்டியனும், மனோகரனும் நண்பர்களாக இருந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட போட்டியால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் சுந்தரபாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகராஜ் என்கின்ற பாம்புநாகராஜ், அவரது நண்பர்களான ராஜ்குமார் என்கிற பாட்டில்ராஜ், யுவராஜ் என்கிற கிளியுவராஜ், ராஜேஷ் என்கிற ஆகாஷ், பாலா என்கிற யுவராஜ், மது, கோபாலகிருஷ்ணன் மற்றும் சூரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.