கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதல் வழக்கில் 2 மாணவர்கள் கைது
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்த வழக்கில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதாக தெரிகிறது. திருத்தணி பகுதியில் இருந்து ரெயில் மூலம் வரும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பூந்தமல்லி பகுதியில் இருந்து பஸ்சில் வரும் மாணவர்கள் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் கல்லூரி வளாகத்திலும் நடக்கலாம் என்று கருதி கீழ்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் நேற்று முன்தினம் போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கல்லூரிக்குள் சென்ற மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அப்போது கல்லூரியின் பின்புறம் உள்ள மதில் சுவரையொட்டி மர்ம பை ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த பைக்குள் 6 பட்டாகத்திகள் மற்றும் 20 காலியான மதுபாட்டில்கள் காணப்பட்டது. அவற்றை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் மீது கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3-ம் ஆண்டு பி.ஏ. படிக்கும் 2 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.