தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-18 02:01 GMT

'தினத்தந்தி'க்கு பாராட்டு

சேலம் சூரமங்கலம் அருகே சுப்பிரமணியம் நகர் பகுதியில் நிழற்கூடத்தையொட்டி முட்புதர்கள் முளைத்து சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ராஜன், சுப்பிரமணியம் நகர், சேலம்.

நோய் பரவும் அபாயம்

கிருஷ்ணகிரி- ஆந்திர எல்லையில் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓதி குப்பம் ஏரியில் நிரம்பி அங்கிருந்து பர்கூர், மத்தூர் வழியாக ஊத்தங்கரை பாம்பாறு அணையில் சேர்கிறது. அந்த ஆற்றில் பர்கூர் அப்பன் செட்டியார் தெரு அருகில் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது. இதனால் ஆற்றில் வரும் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பாம்பாறு செல்லும் வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளின் கழிவுநீர் கால்வாய் ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும்.

-ராம், பர்கூர், கிருஷ்ணகிரி.

குண்டும், குழியுமான சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் 4 ரோடு சாலை மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த பள்ளங்களில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

தெருநாய்கள் தொல்லை

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே ஏலூர் ரோடு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை பார்த்து குரைப்பதுடன் துரத்தி துரத்தி கடிக்கவும் செய்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த பயத்துடனே செல்கின்றனர். எனவே அந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, புதன்சந்தை, நாமக்கல்.

பெயர் பலகை சரி செய்யப்படுமா? 

சேலம் சத்திரம் பகுதியில் முழுநேர திருமால் கிளை நூலகம் அமைந்துள்ளது. அந்த நூலகத்தில் பெயர் பலகை இல்லை. ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை சேதமடைந்துள்ளதால், அந்த பெயர் பலகை நூலகத்தின் மாடியில் கிடக்கிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தின் பெயர் பலகையை புதுப்பித்து பாராமரிக்க வேண்டும்.

-காமராஜ், சத்திரம், சேலம்.

வேகத்தடை வேண்டும்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி- ஜலகண்டாபுரம் சாலையில் கரிக்காப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகில் வேகத்தடைகள் இல்லாததால் சாலையை கடப்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தருவார்களா?

-உதயநிதி சரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்