முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் நல்ல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும்;வர்த்தக அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் நல்ல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கூறினார்.
நாகர்கோவில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் நல்ல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கூறினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். கவுன்சிலர் கலாராணி, நிர்வாகிகள் பாலா, கார்த்திக், சி.டி.சுரேஷ், ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நல்லபல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும். பெண்களுக்கான அரசாக இந்த அரசு விளங்குகிறது. நகைக்கடன் ரூ.4,800 கோடியை தி.மு.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது. பொங்கலின் போது 21 வகையான பொருட்கள் இந்த அரசால் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது. இப்படி பல்வேறு திட்டங்களை இந்த அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு தர வேண்டியுள்ளது. அந்தப் பணத்தை வழங்கியிருந்தால் இதற்கு முன்பு பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை இந்த அரசு வழங்கியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக நிதி ஒதுக்கீடு
கூட்டத்தில் தி.க. இயக்கத்தின் தமிழர் பேரவை பொதுச் செயலாளரும், தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவருமான சுப வீரபாண்டியன் பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைதான் முன்னிலை வகிக்கிறது. பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது இந்த அரசு. இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் 13 பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர். மற்ற எந்த மாநிலத்திலும் இரட்டை இலக்கத்தில் பெண் நீதிபதிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு பெண்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.
இவ்வாறு சுப.வீரபாண்டியன் கூறினார்.
தனிபட்ஜெட்
தொழில்நுட்ப பிரிவு மாநில இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட அரசு தமிழக அரசு. கல்விக்கு பட்ஜெட்டில் 12 சதவீதம் பணத்தை ஒதுக்கியது. தமிழக அரசு, மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இது போல் மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் உன்னத திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், துணைமேயர் மேரி பிரின்சி லதா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் கலைச்செல்வன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜோசப் ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசாமி, ஜெயராணி ஜோஸ், அர்ஜுனன், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி மதியழகன், லிவிங்ஸ்டன், பிராங்கிளின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பொதுக்குழு உறுப்பினர்கள் அழகம்மாள்தாஸ், சேக் தாவூது, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பூதலிங்கம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.