மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை

வரத்து குறைவு காரணமாக மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.120-க்கு விற்பனையானது.

Update: 2022-05-17 20:43 GMT
மதுரை
வரத்து குறைவு காரணமாக மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.120-க்கு விற்பனையானது.
தக்காளி விலை
தக்காளியின் விலை குறைவதும், சில நேரம் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மதுரையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.10 முதல் ரூ.20-க்குள்  இருந்தது.
இதுபோல், மொத்த மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.150-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கோடை மழையின் காரணமாக, மீண்டும் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. 
குறிப்பாக மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முதல் தர தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், இதற்கு அடுத்த ரகம் கிலோவுக்கு ரூ.85 வரையும் விற்கப்படுகிறது. இதற்கும் குறைவான தரம் கொண்ட தக்காளி கிலோ ரூ.60-க்கு நேற்று விற்பனையானது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவு உள்ளது. ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கும் தட்டுப்பாடு உள்ளது. 
ஆந்திரா தக்காளி ஒரு பெட்டி (15 கிலோ) ரூ.900 வரை விற்பனையாகிறது. சிறு, சிறு கடைகளில், சிறிய மார்க்கெட்டுகளில் தக்காளியின் சில்லரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், இந்த வாரத்தில் தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை சீராகவே இருக்கிறது. விரைவில் தக்காளி வரத்து அதிகரித்துவிடும். அதன்பின்னர் விலை படிப்படியாக குறையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்