4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி

திருவாரூர் அருகே 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-17 20:23 GMT
திருவாரூர்,மே.18-
திருவாரூர் அருகே 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
மகளுக்கு பாலியல் தொல்லை
திருவாரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் கட்டிட தொழிலாளிக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் 4 வயது மகளுக்கு கட்டிட தொழிலாளி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். 
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அந்த கட்டிட தொழிலாளி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த 4 வயது குழந்தை சத்தம் போட்டுள்ளது. மகளின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஓடி வந்து பார்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர், 1098 சேவையின் மூலம் குழந்தை பாதுகாப்பு அலகுக்கு புகார் தெரிவித்துள்ளார். 
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் மணிமாறன் அங்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமிக்கு, அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. 
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின்தந்தையான கட்டிட தொழிலாளியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்