காத்தாயி அம்மன், பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழா
காத்தாயி அம்மன், பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உதயநத்தம் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன், பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த 2-ந் தேதி காப்பு கட்டப்பட்டது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 9-ந் தேதி முதல் கடந்த 16-ந் தேதி வரை காத்தாயி அம்மன், பச்சையம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் வீதி உலா நடைபெற்றது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு 16-ந் தேதி இரவு முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை தீமிதி திருவிழா நடைபெற்றது. பூங்கரகம், அக்னி கரகம் ஏந்தி வந்த பக்தர்கள் முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். இதைத்தொடர்ந்து மற்ற பக்தர்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பின்னர் மாலையில் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், காத்தாயி அம்மன், பச்சையம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.