மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற தந்தை கைது

காதலனுடன் பேசிக்கொண்டு இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்து மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-05-17 20:16 GMT
திருவாரூர்:
காதலனுடன் பேசிக்கொண்டு இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்து மகளின்  கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல்-எதிர்ப்பு
திருவாரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய ஒருவரின் 18 வயது மகள் கடந்த சில ஆண்டுகளாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 
இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததையடுத்து அவர் தனது மகளை கண்டித்துள்ளார். தந்தையின் கண்டிப்பையும் மீறி மகள் தொடர்ந்து அந்த வாலிபரை காதலித்து வந்துள்ளளார்.
கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்ல முயற்சி
இந்த நிலையில் தனது வீட்டு வாசலில் காதலனுடன் மகள் பேசிக்கொண்டு இருந்ததை தந்தை நேரில் பார்த்தார். இதனால் அவர் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். பின்னர் இருவரையும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். 
ஆனாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தான் எச்சரித்தும் தனது பேச்சை மகள் கேட்கவில்லையே என்ற ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் வீட்டில் இருந்த நைலான் கயிற்றினால் தனது மகளின் கழுத்தை இறுக்கி கொல்ல முயற்சி செய்துள்ளார். 
ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
அப்போது அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். பின்னர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
தந்தை கைது
இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணின் தந்தை மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையின்போது தனது மகள் காதல் விவகாரம் தனக்கு பிடிக்காததால் ஆத்திரம் அடைந்து மகளை கொல்ல முயற்சி செய்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு
காதலனுடன் பேசியதை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்து பெற்ற மகளையே தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்