கொடைக்கானலில் கோடைவிழா-மலர் கண்காட்சி 24-ந்தேதி தொடங்குகிறது

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா, மலர் கண்காட்சி வருகிற 24-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

Update: 2022-05-17 19:25 GMT
திண்டுக்கல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா, மலர் கண்காட்சி வருகிற 24-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
குளு, குளு சீசன்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலில் தற்போது குவிந்த வண்ணம் உள்ளனர்.
வழக்கமாக சீசன் தொடங்கியதும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானலில் கோடைவிழா நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
24-ந்தேதி தொடங்குகிறது
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொடைக்கானலில், சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதல் 6 நாட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
மேலும் கோடைவிழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடிக்கும் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூத்துக்குலுங்கும் மலர்கள்
இதற்கிடையே நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான பூக்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் மலர்களால் ஆன திருவள்ளுவர் உருவம், கொடைக்கானல் மலைப்பூண்டு, சிறுவர்களை கவரும் விதமாக ஸ்பைடர் மேன், சின்சன் கார்டூன் உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட உள்ளது என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்