வடபாதிமங்கலம், அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

4 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் இடிந்து விழுந்த வடபாதிமங்கலம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-05-17 18:53 GMT
கூத்தாநல்லூர்:
4 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் இடிந்து விழுந்த வடபாதிமங்கலம் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
கஜா புயலில் இடிந்து விழுந்தது
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி  உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.இந்த சுற்றுச்சுவர் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது இடிந்து விழுந்தது. புயல் வீசி 4 ஆண்டுகளாகியும்  சுற்றுச்சுவர் சீரமைக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. 
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி  கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறப்பதற்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் செய்திகள்