நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு பிளஸ்-2 தேர்வு நடந்த 3 மையங்களில் ‘மைக்ரோ’ பிட் பேப்பர்கள் பறிமுதல்-பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-2 கணித தேர்வின்போது 3 மையங்களில் இருந்து ‘மைக்ரோ’ பிட் பேப்பர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் பிளஸ்-1 உயிரியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வை கண்காணிக்க இணை இயக்குனர் பொன்குமார் தலைமையிலான குழுவினர் கொல்லிமலைக்கு சென்றனர்.
பிட் பேப்பர்கள் பறிமுதல்
அப்போது வாழவந்திநாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக அளவில் கூட்டமாக நின்றனர். இதை கவனித்த அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர்கள் உயிரியல் தேர்வுக்கான விடைகளை பிட் அடிப்பதற்காக மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்து கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களையும், ஜெராக்ஸ் கடை ஊழியரையும் எச்சரிக்கை செய்த அதிகாரிகள் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 கணித தேர்வு நடந்தது. இதில் மாணவர்கள் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அடிக்க வாய்ப்பு இருப்பதாக எண்ணிய இணை இயக்குனர் பொன்குமார் தனியாக ஒரு பறக்கும் படை குழுவினரை கொல்லிமலைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் வாழவந்திநாடு உண்டு உறைவிட பள்ளியில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20-க் கும் மேற்பட்ட மாணவர்கள் பறக்கும் படையினரிடம் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை கொடுத்தனர்.
ஜன்னல் வழியாக வீசினர்
இதேபோல் பறக்கும் படை குழுவினர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 20 மாணவர்களிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பள்ளிபாளையம் அரசு பள்ளியில் 3 மாணவர்களிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில மாணவர்கள் சோதனையின்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பிட் பேப்பர்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் கூறியதாவது:-
கொல்லிமலை, குமாரபாளையம் பகுதிகளில் மாணவர்கள் ஜெராக்ஸ் கடைகளில் அலைமோதியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே பறக்கும் படை அலுவலர்கள் மூலம் சோதனை நடத்தினோம். இந்த சோதனையில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சுமார் 1 கிலோ மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் கொடுப்பதற்கு முன்பே சோதனை நடத்தியதால் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே ஜெராக்ஸ் கடைகள், கம்ப்யூட்டர் சென்டர்களை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். மேலும் பிட் பேப்பர்களை தயார் செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.