ஊராட்சி பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
பெரியங்குப்பத்தில் ஊராட்சி பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக வேலைபார்ப்பவர் கோவிந்தசாமி (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (31) என்பவருக்கும் நேற்று தண்ணீர் வினியோகம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், பம்ப் ஆபரேட்டர் கோவிந்தசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் வேலைக்கு சென்றனர். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.